கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த ஆசிரியர் உடனே வெளியே வந்து இரண்டு பேரையும் எச்சரித்துள்ளார். இதில் கோபம் அடைந்தவர்கள் ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் வடக்கிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.