கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக மையத்தில் பயிற்சி பெற வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விடுதி காப்பாளர் ராமலட்சுமி தங்குவதற்கு அனுமதி கொடுத்தார்.

இதனையடுத்து அவர் விடுதியில் ஏற்கனவே தங்கி இருக்கும் பெண்களிடம் சகஜமாக பேசியுள்ளார். இந்நிலையில் யாருக்காவது வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் நான் வாங்கி தருகிறேன் என ராமலட்சுமி கூறியுள்ளார். இதனை நம்பி ஒரு பெண் 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இதே போல் 2 பெண்கள் மடிக்கணினியை கொடுத்துள்ளனர். அதன் பிறகு ராமலட்சுமி திடீரென அங்கிருந்து மாயமானார்.

அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இது தொடர்பாக விடுதி வார்டன் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ராமலட்சுமி மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இவர் மகளிர் விடுதியில் தங்கி அரசு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு போலியான அடையாள அட்டை மற்றும் நியமன ஆணையை கொடுத்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். அவருக்கு 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே ராமலட்சுமிக்கு உதவியாக இருந்தது யார்? இதே போன்று எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.