கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார் கடன் நிறுவனத்தில் பொருட்களை வாங்கியதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. நாங்கள் எந்த பொருட்களும் வாங்கவில்லை. ஆனால் அதற்கான பணம் கட்ட வேண்டும் என குறுந்தகவல் வந்தது.

இது தொடர்பாக விசாரித்த போது அழகியபாண்டியபுரம் பகுதியில் இருக்கும் தனியார் கடன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் எங்களிடம் இருந்து வாங்கிய ஆதார் கார்டின் நகலை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதனால் அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது அவர் வெளிநாடு சென்றதாக தெரிவித்தனர். இதே போல் அவர் பலரிடம் 80 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.