சென்னையில் உள்ள தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கி உள்ள விடுதி ஒன்று உள்ளது. அங்கு 2 தினங்களுக்குமுன் வாலிபர் ஒருவர் வந்து, விடுதியின் மேல் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் நான் கீழ்த்தளத்தில் புதிதாக வந்துள்ளேன் என்று பேச்சு கொடுத்துள்ளார். அப்போது என்னுடைய பணம் அனுப்பும் செயலி லாக் ஆகி விட்டது என்றும் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவ செலவிற்கு ரூ.5 ஆயிரம் பணத்தை உடனே அனுப்ப வேண்டும். பின்னர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தருவதாவும் அப்பாவியாக கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞர்களும் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரத்தை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து  கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் சென்று, ‘நான் மேல் தளத்தில் தங்கி உள்ளதாகவும், என்   அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நைசாக பேசி அவர்களிடம் இருந்தும் ரூ.5 ஆயிரம் பணத்தை அனுப்ப வைத்துள்ளார்.

பின் விடுதியை விட்டு வெளியே சென்ற அந்த வாலிபர் எனது பெற்றோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியதால், ரூ. 40 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். எனவே ரூ.40 ஆயிரத்தை போன் செயலி மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் வராததால் அவரைப் பற்றி விசாரித்தனர். அப்போதுதான் அந்த வாலிபர்  விடுதியில் தங்கவே இல்லை எனவும் நூதன முறையில், அனைவரையும் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் தரமணியில் உள்ள மற்ற விடுதிகளிலும் உள்ள நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி நபர் இதேபோல், மற்றொரு விடுதிக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் பணம் பறிக்க முயன்ற போது, அந்த இளைஞர்கள் அவரிடம் நைசாக பேசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அந்த நபரின் பெயர் சச்சின் குமார் (22). பி.ஏ. பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் அந்த வேலை பறிபோனதால், சென்னையில் உள்ள நண்பர்களை பார்க்க வந்ததாகவும்,  அப்போது தொடர் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.