கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த 29 வயதான சங்கீத்குமார் என்ற வாலிபர், கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த புகாரில் கோழிக்கோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கீத்குமார், சமூக ஊடகமான ‘முகநூல்’ மூலமாக கல்லூரி மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வந்தது போலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் மாணவிகளின் முகநூல் பக்கத்தில் நுழைந்து, அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தையும், தொடர்பு எண்களையும் சேகரித்து வந்த சங்கீத்குமார், பின்னர் தன்னை அந்தக் கல்லூரியின் சீனியர் மாணவியாக காட்டி குறுந்தகவல் அனுப்பி நட்பாக பேச தொடங்குவார். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி துன்புறுத்தி வந்துள்ளார். இவ்வாறு ஏராளமான மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சில மாணவிகள் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை செல்போன் டவர் தகவலின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போனும், சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
