அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகப் பரவிய தகவலுக்கு, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “இந்தத் தொகுதி புரட்சித் தலைவி அம்மாவின் கோட்டை, இது ‘அம்மா சமுத்திரம்’. நான் நடத்திய சர்வே படி 70 சதவீத மக்கள் இப்போதும் அதிமுகவிற்கே வாக்களிக்கத் தயாராக உள்ளனர். முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே இங்கு வந்து நின்றால் கூட தோல்வியைத் தான் தழுவுவார்” என்று இசக்கி சுப்பையா அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், கட்சி மாறிச் சென்றவர்களைக் கடுமையாகச் சாடினார். “நல்லவர்கள் என்றுமே வெற்றி பெறுவார்கள். ஒரு சிலர் ஆசை காட்டி ‘இங்கே வந்துவிடு, அங்கே வந்துவிடு’ என என்னை அழைக்கிறார்கள். ஆனால், மற்றவர்களைப் போல ஆசைக்கு இணங்கி ஓடிப் போகிறவன் நான் கிடையாது. எனது அடையாளம் என்றும் ‘இரட்டை இலை’ தான், நான் எங்கும் போகமாட்டேன்” என்று கூறி, தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற செங்கோட்டையனின் முடிவை இசக்கி சுப்பையா பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.