தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று கூறியதோடு, “விரைவில் ஒரு புதிய கட்சி அதிமுக கூட்டணியில் சேரப்போகிறது” என ஒரு அணுகுண்டை வீசியுள்ளார். ஏற்கெனவே அதிமுக-பாஜக-பாமக என ‘வெற்றிக் கூட்டணி’ ஒரு பக்கம் வலுவாகிக் கொண்டிருந்தாலும், இபிஎஸ் சொன்ன அந்த ‘புதுசு’ யார் என்பதுதான் இப்போது டாக் ஆஃப் தி டவுன்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ‘ஜனநாயகன்’ படப் பிரச்சனைகளிலும், சிபிஐ விசாரணைகளிலும் சிக்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியிருப்பது பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. ஒருபுறம் பாஜக-வின் டெல்லி மேலிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை இணைக்க முயற்சி செய்து வரும் நிலையில், எடப்பாடி கைகாட்டும் அந்தத் திசை தேமுதிகவா? அமமுகவா? அல்லது விஜய்யின் கட்சியேதானா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
