தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரான லயோலா மணி, அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், “திமுக அரசு கொடுக்கும் பணம் அவர்களின் சொந்தக் காசு அல்ல; அது நீங்கள் செலுத்திய வரிப்பணம் தான். அதனால் அரசு கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு எந்தத் தயக்கமும் காட்டாதீர்கள். அது 30,000 ரூபாயாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் காசை நீங்களே திரும்பப் பெறுவதில் என்ன தவறு?” என்று பேசியுள்ளார்.

​மேலும், “அப்படி வாங்கும் பணத்தை வைத்து உங்கள் குடும்பத்தை மட்டும் கவனிக்காமல், ‘ஜன நாயகன்’ போன்ற திரைப்படங்களுக்குச் சென்று செலவு செய்யுங்கள். ஆனால், ஓட்டுப் போடும்போது மட்டும் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் போட்டுவிடுங்கள்” என்று அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணத்தைச் சினிமாவுக்காகச் செலவிடச் சொல்வதும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கத் தூண்டுவதும் ஆரோக்கியமான அரசியலா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.