தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்த பின்னரும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்கள் தேவைப்படுவதால் விஜய் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக-வுக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகாரப்பூர்வ கூட்டம் ஒருபுறம் நடக்க, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் இல்லத்தில் வேலுமணி, கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், சி.வி. சண்முகம் தலைமையில் 15 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் திடீரென புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் ‘ரிசார்ட்’ அரசியலை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற 47 எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “தவெக-வுக்கு அதிமுக ஆதரவு அளிக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம்; எந்தச் சூழலிலும் விஜய்யின் கட்சியை ஆதரிக்காது” எனத் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையே, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்து, அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கத் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதிமுக தரப்பில் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை திமுக தலைமை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் ஏ. சரவணன் கூறுகையில், “அதிமுக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மக்கள் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட எங்களுக்கு விருப்பமில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதிலேயே உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆட்சி அமைக்கப்போவது தொடர்பாக ஒருவித மர்மம் நீடிக்கிறது.
