நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், ஒரு புதிய கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலிலேயே 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சாதனை படைத்துள்ளது. திரைத்துறையில் விஜய்க்கு இருந்த ‘அந்தஸ்தையும், சமூக வலைதளங்களில் அவருக்குக் கிடைத்த மில்லியன் கணக்கிலான ‘லைக்குகளையும்’ வெற்றிகரமான வாக்கு வங்கியாக மாற்றிய பெருமை, அக்கட்சியின் முதன்மை வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியையே சாரும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய்யுடன் இணைந்த இவர், வெறும் தேர்தல் ஆலோசகராக மட்டுமின்றி, கட்சியின் கொள்கை உருவாக்கம் முதல் உட்கட்டமைப்பு வரை அனைத்தையும் தீர்மானிக்கும் மையச் சக்தியாகச் செயல்பட்டுள்ளார்.

தவெக-வின் அரசியல் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் ஆரோக்கியசாமியின் பங்கு மிக முக்கியமானது. தமிழக வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் திராவிட சித்தாந்தத்துடன் இணைந்திருப்பதை உணர்ந்த அவர், விஜய்யை ஒருபோதும் பாஜக நோக்கியோ அல்லது வலதுசாரி அரசியல் நோக்கியோ நகர்த்தாமல் தடுத்தார்.

“திமுக அரசியல் எதிரி; பாஜக சித்தாந்த எதிரி” என்ற புகழ்பெற்ற முழக்கத்தை உருவாக்கி, விஜய்யை ஒரு திராவிடச் சார்புள்ள மாற்றாக நிலைநிறுத்தினார். நடிகர் விஜய்யை ஒரு ‘வழிபாட்டுக்குரிய ஆளுமையாக’  முன்னிறுத்திய அதே வேளையில், திமுக-வை ஒரு குடும்ப அதிகார அமைப்பாகச் சித்தரித்து அதை உடைக்கும் வியூகத்தை இவர் வகுத்துக் கொடுத்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இவர், திருச்சியில் கல்வி பயின்று சென்னையில் மேலாண்மைப் பட்டம் பெற்றவர். பாமக-வின் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ பிரச்சாரம் மற்றும் கர்நாடகாவின் சித்தராமையா எனப் பல்வேறு மாநில அரசியல் களங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தீவிர மதப்பற்று கொண்டவராக இருந்தாலும், அரசியல் களத்தில் மதச்சார்பற்ற நிலைப்பாட்டையே முன்னிறுத்தினார்.

‘புஸ்ஸி’ ஆனந்த் தனது ரசிகர் மன்றப் படையின் மூலம் தரைமட்ட வேலைகளைக் கவனிக்க, ஜான் ஆரோக்கியசாமி அந்தப் படைக்குத் தேவையான நவீன அரசியல் வடிவத்தையும், கூர்மையான வியூகங்களையும் வழங்கி விஜய்யை அரியணையின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் தற்போது நடிகர் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்க விட்டாலும் அவரது வெற்றிக்கு காரணமான ஜான் ஆரோக்கிய சாமியை பலரும் யார் என்று தேடி வருகிறார்கள்.