தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன. இதில் மிகப்பெரிய திருப்பமாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்விச் செய்தி கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகுந்த வருத்தமடைந்தார். ஸ்டாலின் போன்ற ஒரு மூத்த மற்றும் பெரிய தலைவர் தோல்வியடைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
‘ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர்.. மக்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லையே’ என்று கூறி அவர் ஆதங்கப்பட்டார். அரசியலில் இரு துருவங்களாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் மாண்புமிக்கவர் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், ஒரு மூத்த தலைவரின் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
