உலகமே ஈரான்-இஸ்ரேல் மோதலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஆப்பிரிக்காவின் உகாண்டா காடுகளில் சிம்பன்சிகளுக்கு இடையே ஒரு பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடந்து வருவது உலகையே அதிர வைத்துள்ளது.

கிபாலே தேசிய பூங்காவில் ‘நகோகோ’ எனப்படும் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி குழுவில், கடந்த 30 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த 200-க்கும் மேற்பட்ட சிம்பன்சிகள் தற்போது ‘மத்திய குழு’ மற்றும் ‘மேற்கு குழு’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முதிர்ந்த சிம்பன்சிகளும், 25-க்கும் மேற்பட்ட குட்டிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளன.

மனித சமூகங்களில் ஏற்படும் அரசியல் மற்றும் இனப் பிரிவினைகளைப் போலவே, விலங்கு உலகிலும் உறவுகளில் ஏற்படும் விரிசல் எவ்வளவு பெரிய அழிவைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

முன்பு டான்சானியாவில் ஜேன் குடால் என்பவரால் கவனிக்கப்பட்ட சிம்பன்சி மோதல்கள் உணவுக்காக நடந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இந்த நகோகோ சிம்பன்சிகளின் போர் முற்றிலும் மாறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஆரோன் சாண்டல் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், கலாச்சார ரீதியாக ஒன்றாக வளர்ந்த உயிரினங்களுக்குள் சமூக உறவுகள் சிதைவதே இத்தகைய வன்முறைக்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்குப் போர் என்பது மதம் அல்லது தேசத்தின் பெயரால் நடக்கிறது, ஆனால் சிம்பன்சிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் போர், அதிகாரப் போட்டியும் உறவுகளின் பிளவும் தான் வன்முறையின் ஆதி மூலம் என்பதைக் காட்டுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.