வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள புகார்களை அடுத்து, எலான் மஸ்க் மெட்டா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அந்நிறுவனம் ரகசியமாக இடைமறித்து படிப்பதோடு, அக்சென்சர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஒரு கூட்டு நடவடிக்கை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் செய்திகள் பாதுகாக்கப்படுவதாக மெட்டா கூறி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், “வாட்ஸ்அப்பை நம்ப முடியாது” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மெட்டா ஊழியர்களோ அல்லது வேறு யாரும் படிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், பயனர்களின் தரவு பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய புகார்கள் உலகளவில் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, எலான் மஸ்க் போன்ற ஒரு தொழில்நுட்ப ஜாம்பவான் இந்த விவகாரத்தில் மெட்டாவை விமர்சித்திருப்பது, வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.