”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்நிலையில் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் இந்த புதிய முறை ஏற்படுத்த உள்ளது. இதற்காக பள்ளியில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு வருடத்திற்கு தேவையான இணைய வசதி ஆகியவை அமைக்கபட உள்ளன.
இதற்கு ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் மற்றும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனையடுத்து நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.