அஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கானின் மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலீம் ஷின்வாரி சமீபத்தில் காலமானது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஷார்ஜா மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ரஷீத் கானிடம் நேரில் சென்று ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். குறிப்பாக ஷாஹீன் ஷா அஃப்ரிதி மற்றும் ஃபகார் சமானும் ரஷீதுடன் உரையாடி அவருக்கு ஆறுதல் கூறினர். ரஷீத் கான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். சகோதரரை இழந்த சோகத்திலும், ரஷீத் தனது பங்கு நிறைவேற்ற 4 ஓவரில் 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
Pakistan team offers condolences and prayers on the death of Rashid Khan’s elder brother. #PakistanCricket #RashidKhan pic.twitter.com/gxwvXyYdnG
— Ahtasham Riaz (@ahtashamriaz22) August 29, 2025
போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகாவின் அதிரடியான 36 பந்துகளில் 53 ரன்கள் உள்ளிட்ட பலத்த அதிரடிக்கு அஃப்கான் பந்துவீச்சாளர்கள் பலவீனமடைந்தனர். பாகிஸ்தான் அணி 182 ரன்கள் குவித்தது. அஃப்கானிஸ்தான் பந்து வீச்சில் ஃபரீத் அக்மத் 2 விக்கெட்டும், ரஷீத், நபி, முஜீப், உமர்சாய் தலா ஒரு விக்கெட்டும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து, ரஷீத் கான் வீரராக மீண்டும் ஒருமுறை மேடை ஏறி, வெறும் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்து, ஐந்து சிக்ஸர்கள் அடித்துத் தனி போராளியாகத் திகழ்ந்தார். ஆனால், அவரை தவிர மற்ற வீரர்கள் கூடுதல் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ரவ்ப் 4 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்து வீச்சாளராக வெளிப்பட்டார். ஷாஹீன், நவாஸ், சுஃபியான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். போட்டிக்குப் பிறகு ரஷீத் கான் பேசியதில் “11 முதல் 15 ஓவருக்குள் எங்கள் விக்கெட்டுகள் சரிந்ததுதான் முக்கியக் காரணம். அந்த இடைவெளியில் சிறந்த ஓவர்கள் வந்திருக்கவேண்டியது. அதை நாம் இழந்துவிட்டோம்” என்றார். பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி யுஏஇ அணியை எதிர்கொள்கிறது.
