ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008-ஆம் ஆண்டு அறிமுகமானது. அதில் மொகாலியில் நடந்த ஒரு போட்டியில், மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டம் முடிந்தபின் வீரர்கள் கைகுலுக்கும் தருணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், கன்னத்தில் கைவைத்தபடி அழுத ஸ்ரீசாந்தின் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அந்த வீடியோ அப்போது வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியான காட்சிகளில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்ததும், இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து செல்ல முயன்றதும், அப்போது நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் சமாதானப்படுத்தியதும் தெளிவாக இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகியதும், பழைய சர்ச்சை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“>

இதுபற்றி ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “லலித் மோடி, மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 2008-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ஸ்ரீசாந்தும் ஹர்பஜனும் இந்த விவகாரத்திலிருந்து மீண்டு, தற்போது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பழைய காயத்தை மீண்டும் கிளறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். இது வீரர்களை மட்டுமின்றி, அவர்களின் அப்பாவி குழந்தைகளையும் பாதிக்கும். மலிவான இந்த செயலுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். கடவுளுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.