நூற்றாண்டை தாண்டியும் மக்களால் ஆவலுடன் கொண்டாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் இன்று மாற்றமடைந்துள்ளது. இந்த விளையாட்டு உலகம், வெறும் விளையாட்டு மட்டும் அல்லாமல், பலருக்கு பிரமாண்ட வருமானம் ஈட்டும் வாய்ப்பாகவும் மாறியுள்ளது. சர்வதேச போட்டிகள், உள்நாட்டு தொடர்கள், IPL போன்ற லீக்குகள், விளம்பர ஒப்பந்தங்கள் என அனைத்து தளங்களிலும் வெற்றிகொடுத்து, கிரிக்கெட் வீரர்கள் இன்று கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் உலகிலேயே அதிக சொத்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில், இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மிக அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஆர்யமான் பிர்லா. பெரிய அளவில் கிரிக்கெட்டில் பிரசித்தி இல்லாத இவருக்கு, ரஞ்சி மற்றும் IPL போட்டிகள் மட்டுமே அனுபவமாக இருந்தாலும், இவர் தான் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் இது சாத்தியமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஐகான்களான சச்சின் டெண்டுல்கர் (₹1300 கோடி), விராட் கோலி (₹1050 கோடி), தோனி (₹1000 கோடி), கங்குலி (₹634 கோடி) என இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றனர். இந்த பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென்ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், மேற்கிந்தியத் தீவுகளின் பிரயன் லாரா போன்ற முன்னணி கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் விளையாட்டாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய வர்த்தக துறையாகவும் வளர்ந்துள்ளது என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது.
