நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம் வசூல் செய்து வருகிறது. இந்த குளங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதே போல் குளங்கள் மாசுபட்டால் அதனை நகராட்சி சுத்தம் செய்து வருகிறது. இந்நிலையில் அரியாண்டிகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. மேலும்  குளத்தை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீரே தெரியாத அளவிற்கு புதர் மண்டி காணப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு  இந்த குளத்தில் காளைகன்று ஒன்று தவறி விழுந்து விட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து குளத்தில் இறங்கி போராடி கன்றை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்துள்ளனர். அதேபோல் குளத்தில் ஆகாய தாமரை படர்ந்து இருப்பதால் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் இந்த குளத்தில் கலந்து வருவதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றி தூர்வாரவும், கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.