திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் தொகையை கடனாக பெற்றுள்ளார். இவரது குடும்பத்தினர் இதுவரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை கடனை திருப்பி செலுத்தி இருப்பதாகவும் கடந்த 4 மாத காலம் செலுத்தவில்லை என தெரிகிறது. ஏனெனில் சரியாக வேலை இல்லாத காரணத்தால் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

எனவே கடந்த சில நாட்களுக்கு முன், வேலாத்தாளின் வீட்டிற்கு நிதிநிறுவன ஊழியர்கள் வந்து  கூறி நோட்டீஸ் அளித்த நிலையில், நேற்று மீண்டும் வந்த ஊழியர்கள் வீட்டிற்கு பூட்டு போட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது வீட்டை ஜப்தி செய்து விடுவார்களோ என்று மூதாட்டி அச்சமடைந்தார். இதனால் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற போது, அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நிதி நிறுவன ஊழியர்களை சிறைபிடித்தனர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்  இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்களை அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.