நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், வரலாற்றுத் தரவுகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக இளைஞர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, 1965 பிப்ரவரி 12-ஆம் தேதி இந்திரா காந்தி கோவைக்கு வராத நிலையில், அவர் அங்கு வந்தது போன்றும் அவர் முன்னிலையில் ரயில் எரிக்கப்பட்டது போன்றும் தவறான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இத்தகைய காட்சிகளைப் படக்குழுவினர் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவான பிரச்சாரப் படமாகத் தெரிவதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷமத்தனமான கருத்துகள் இதில் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இளைஞர் காங்கிரஸ், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
