தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சசிகலா வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான அன்றைய தினமே கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின் இந்த புதிய கட்சியில் அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இணைய உள்ளதால் அந்த இரு கட்சிகளிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் சசிகலா கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கியமான 30 தொகுதிகளைச் சசிகலா குறிவைத்துள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொகுதிகளில் தனது செல்வாக்கை நிரூபித்து, மாற்று அரசியலை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டவுடன், தமிழக வெற்றி கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் சசிகலா தரப்பு தயாராகி வருகிறது.

தென் மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பெரிய அளவிலான வாக்கு வங்கியைத் திரட்ட சசிகலா எடுக்கும் இந்த முயற்சிகள், வரும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.