நீட்மறுதேர்வு கடினமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி  பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகே என்ற அந்த மாணவர், நாடு முழுவதும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சுஷில், இந்த முறை கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகத் தனது குடும்பத்தினரிடம் கூறி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், தேர்வு தந்த கடுமையான மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக, சுஷில் தாகே தனது மொபைல் போனில் 33 விநாடிகள் ஓடக்கூடிய மிக உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அம்மா, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், நீ வருத்தப்படாதே. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் மீண்டும் உனக்கே மகனாகப் பிறக்க வேண்டும். என்னை மன்னித்துவிடு அம்மா” என்று கண்ணீருடன் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவைக் கைப்பற்றியுள்ள ஹிங்கோலி நகர காவல்துறையினர், மாணவனின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நீட் தேர்வு குறித்த விவாதங்களையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.