தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் திமுகவுடன் கைகோர்த்தது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தேமுதிகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தேமுதிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுப்பதற்கான ரகசியத் திட்டத்தை அதிமுக மாவட்டச் செயலாளர்களிடம் அவர் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த ரகசியப் பொறுப்பின் மூலம் தேமுதிகவின் முக்கியத் தூண்களாக இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவுக்கு அழைத்து வந்து அந்த கட்சியை பலவீனப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தேமுதிகவில் உள்ள சீனியர் நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களை அணுகி அவர்களை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேமுதிகவின் வாக்கு வங்கியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி, அதிமுகவின் பலத்தை அதிகரிக்க இபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணிக் கணக்குகள் மாறியுள்ள நிலையில், அதிமுக மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
