கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட் மைதானம் ஒன்றில் அமைச்சர் சரத்குமார் அவர்கள் ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்துவது போன்ற காணொளி (Video) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அது போதைப்பொருள் என்ற ரீதியில் வதந்திகள் பரப்பப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியது.

 இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், அபாண்டமான அந்தப் பழிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். “அன்று எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குழந்தைக்குக் கொடுப்பதற்காக மாத்திரையைத் தான் நான் கையில் வைத்திருந்தேனே தவிர, அது வேறு எதுவும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், “போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அதற்கு எதிராகப் பேசிவிட்டு வந்த பிறகு எனக்கே இப்படி ஒரு பழியைச் சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இதன் மூலம், கடந்த இரண்டு வருடங்களாக வலம் வந்த அந்த சர்ச்சைக்குரிய போலிப் பிரச்சாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.