கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டிற்கான டாடா ஐபிஎல் (IPL 2026) டி20 கிரிக்கெட் தொடரின் முழுமையான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் இந்தத் திருவிழா, மே மாதம் வரை விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.
தொடரின் தொடக்க ஆட்டம் மார்ச் 28-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 29-இல் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தை மார்ச் 30-ஆம் தேதி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது. சென்னையில் (சேப்பாக்கம்) சிஎஸ்கே விளையாடும் சில முக்கியப் போட்டிகள் குறித்து பார்ப்போம்.
ஏப்ரல் 03: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக.
ஏப்ரல் 11: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக.
ஏப்ரல் 14: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக.
மே 02: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3:30 மற்றும் இரவு 7:30 என இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இம்முறை போட்டிகள் பெங்களூரு, மும்பை, சென்னை தவிர குவஹாத்தி, புதிய சண்டிகர், தர்மசாலா மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றின் கடைசிப் போட்டி (Match No. 70) மே 24-ஆம் தேதி கொல்கத்தாவில் கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மேலும் மொத்தம் 70 லீக் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது முழுமையாகத் தெரியவந்துள்ளது. பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா ஆகிய தளங்களில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
