இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மீது இனவெறி புகார்களை சுமத்தி அண்மையில் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகிய முன்னாள் வீரர் லட்சுமணன் சிவராமகிருஷ்ணன், தனது கிரிக்கெட் பயணத்தில் சந்தித்த கொடுமைகளை தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பதினேழு வயதிலேயே இந்திய அணியில் நுழைந்த சிவராமகிருஷ்ணன், சக வீரர்களாலேயே உருவக்கேலிக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் தொடரின் போது அவரது 17-வது பிறந்தநாளுக்காக சுனில் கவாஸ்கர் ஒரு சாக்லேட் கேக் ஆர்டர் செய்திருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு சக வீரர், “சன்னி, ஒரு கறுப்பான பையனுக்கு சரியான ‘டார்க்’ சாக்லேட் கேக் வாங்கியிருக்கிறாய்” என எள்ளி நகையாடியுள்ளார். இதனால் சிறுவன் சிவராமகிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழுது கேக் வெட்ட மறுத்துள்ளார். பின்னர் கவாஸ்கர் அவரைச் சமாதானப்படுத்தியுள்ளார்.

முன்னதாக 14 வயதில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த போது, ஒரு மூத்த இந்திய பேட்டர் இவரை மைதான ஊழியர் என நினைத்து தனது காலணிகளை சுத்தம் செய்யச் சொல்லியுள்ளார். தமிழக அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த மூத்த வீரர்களும் இவரை ‘அசிங்கமானவன்’ என உருவக்கேலி செய்துள்ளனர். வட இந்தியாவில் விளையாடும்போது ரசிகர்கள் இவரை ‘காலியா, காலியா’ (கருப்பன்) என அழைத்து மனதளவில் காயப்படுத்தியுள்ளனர்.

இந்திய அணியின் உறுப்பினராக இருந்தும், மும்பையின் ட்ரைடென்ட் ஹோட்டல் காவலாளி சிவராமகிருஷ்ணனை உள்ளே விட மறுத்துள்ளார். அவரது நிறம் மற்றும் வயதைப் பார்த்து இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இருக்க முடியாது என அவர் தடுத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு, மற்றொரு சக வீரர் வந்து அடையாளம் காட்டிய பிறகே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியான இத்தகைய அவமானங்களால் தனது தன்னம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். “பாகிஸ்தான் ரசிகர்கள் ஒரு மாத காலம் என்னைக் கருப்பன் எனச் சொல்லி கேலி செய்தனர். இதனால் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. அந்த வேதனையை மறக்க மது அருந்தத் தொடங்கினேன். தூக்கத்தில் பயங்கரமான கனவுகள் வரும். துபாயில் ஐபிஎல் போட்டிகளின் போது அதிவேகமாகச் செல்லும் காரிலிருந்து கதவைத் திறந்து குதிக்கலாம் என்று கூடத் தோன்றியது,” என்று தனது மன அழுத்தத்தின் உச்சத்தை விவரித்தார்.

மேலும் தனது 16, 17 வயதில் சந்தித்த இந்த வடுக்கள் இன்னும் தனது அடிமனதில் நீங்காமல் இருப்பதாகக் கூறிய சிவராமகிருஷ்ணன், இது வெறும் ஒரு கிரிக்கெட் வீரரின் கதை மட்டுமல்ல, சக மனிதர்களின் சொற்கள் ஒருவரை எந்த அளவிற்குச் சிதைக்கும் என்பதற்கான சாட்சி எனக் கூறியுள்ளார்.