உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நக்லா பூரா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரகாஷ் என்ற வாலிபர், பிரியங்கா என்ற தனது திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பிரியங்காவின் கணவர் விபின் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோதுதான் இந்தத் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும் அவர் வீட்டின் கதவைத் தட்டியும் திறக்காததால், ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை உணர்ந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முற்றத்தில் பிரியங்கா பிணமாகக் கிடக்க, அவரது இரண்டு வயதுக் குழந்தை தாயின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அவர் நிலைகுலைந்து போனார்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டு வாலிபரான பிரகாஷ் அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு விபின் அதிர்ச்சியில் உறைந்து கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரகாஷ் முதலில் அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, பின்னர் பயத்தில் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனியாக வசித்து வந்த அந்த வாலிபர் எதற்காக இந்தப் பெண்ணைக் கொலை செய்தார் என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
