ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திம்மிரெட்டிபள்ளி கிராமத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் நன்மைக்காக ‘அம்மாவாரி ஜதாரா’ என்ற திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து 50,000 ரூபாய் செலவில் ஒரு எருமை மாட்டினை வாங்கி பலியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விலங்குகளைப் பலியிடும் இந்தச் செயலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் அந்த எருமை மாட்டின் புகைப்படங்களை இணைத்து, மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் உடனடியாகப் புகார் அளித்தனர். மத்திய அமைச்சகம் இப்புகாரைப் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் போலீசார் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர்.
இதனால் பலி கொடுக்கப்படவிருந்த எருமை மாட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது கட்டப்பட்டிருந்த இடத்தில் அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் எருமை மாட்டின் உயிர்ப் பலி முற்றிலும் தடுக்கப்பட்டு, அந்த மாடு விஐபி அந்தஸ்துடன் பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் இறுதியில், கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி மாற்று வழிபாடுகளை நடத்தித் திருவிழாவை முடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
