ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா மார்ச் 28-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆர்.சி.பி. மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுவதால் இப்போதே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வழக்கமாக இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டிகளில், இரண்டாவதாகப் பந்துவீசும் அணிக்குப் பனிப்பொழிவு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
பனிப்பொழிவால் பந்து ஈரமாகி வழுக்கும் என்பதால், பந்துவீச்சாளர்களால் பந்தைச் சரியாகப் பிடிக்க முடியாது. இதனால் பந்து தனது வடிவத்தை இழந்து, பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க எளிதாகிவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்கவே ஒரு சிறப்பான விதிமுறை நடைமுறையில் உள்ளது. இதன்படி, இரண்டாவதாகப் பந்துவீசும் அணியின் கேப்டன், ஆட்டத்தின் 10 ஓவர்கள் முடிந்த பிறகு பந்தின் வடிவம் மாறிவிட்டதாகக் கூறி அதை மாற்றக் கோரலாம்.
நடுவர் அதைச் சரிபார்த்துவிட்டுப் புதிய பந்தை வழங்குவார். ஆனால், இந்த கோரிக்கையை 10 ஓவர்கள் முடிந்த பிறகுதான் வைக்க முடியும். அதேபோல், ஓவருக்கு நடுவில் பந்தை மாற்றக் கேட்க முடியாது, அந்த ஓவர் முழுமையாக முடிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பந்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக நடுவர் கருதினால், அவர் எந்த நேரத்திலும் பந்தை மாற்றும் அதிகாரம் பெற்றுள்ளார். இந்த விதியினால் பனிப்பொழிவிலும் பந்துவீச்சாளர்கள் தங்களின் திறமையைச் சரியாக வெளிப்படுத்த முடியும். டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீசத் துடிக்கும் அணிகளுக்கு இந்த விதிமுறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
