ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. அர்ஜுன் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார். லக்னோ அணியில் முகமது ஷமி, மயங்க் யாதவ், அன்றிச் நோர்க்யா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், அர்ஜுனுக்கு இடம் கிடைப்பது கடினம் என அஸ்வின் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்வினின் இந்தக் கருத்தை ‘முட்டாள்தனமானது’ என யோகராஜ் சிங் (யுவராஜ் சிங்கின் தந்தை) கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும்போது, அஸ்வின் பேசுவதெல்லாம் வெறும் உளறல். தொலைக்காட்சியில் அமர்ந்துகொண்டு ஒரு வீரரைப் பற்றி என்ன பேச வேண்டும் என்ற விவிரம் அவருக்குத் தெரியவில்லை. அர்ஜுன் டெண்டுல்கரின் பலம் என்ன என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளரே கிடையாது; அவர் ஒரு சிறந்த பேட்டர். அவரது முதுகுத்தண்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் பந்துவீச்சில் கவனம் செலுத்துவது தவறு.
அர்ஜுன் டெண்டுல்கரின் திறமை குறித்து யோகராஜ் சிங் ஒரு அதிரடி சவாலையும் விடுத்துள்ளார். அதாவது “அர்ஜுன் டெண்டுல்கர் என்னுடன் வெறும் 6 மாதங்கள் மட்டும் பயிற்சியில் இருந்தால், அவரை உலகின் மிகச்சிறந்த பேட்டராக மாற்றிக் காட்டுவேன். உலகின் முன்னணி பேட்டர்களை அவர் முந்துவார். அப்படி என்னால் செய்ய முடியாவிட்டால், நான் எனது தாடியை சவரம் செய்து கொள்கிறேன். இதுவே எனது சவால்,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
லக்னோ அணியில் முகமது ஷமி, ஆவேஷ் கான், மொஹ்சின் கான், ஆகாஷ் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டாளமே உள்ளதால், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பெரும் கேள்விகுறியாகவே உள்ளது. மேலும் இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜுன், 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
