தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாகத் நீதிமன்றம் தற்பொழுது சம்மன் அனுப்பியுள்ளது ஆந்திரா மற்றும் தெலுங்கானா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 டிசம்பரில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது, ரசிகர்களின் அசுர கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சோகமான மரணம் குறித்து ஹைதராபாத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய மேலாளர் உட்பட மொத்தம் 23 பேர் மீது போலீஸார் தற்பொழுது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் மரண வழக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
