அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களை வகுத்து வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைந்து வரும் சூழலில், தனியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்ய அவர் முயற்சி எடுத்து வருவதாகவும், இதற்கான பூர்வாங்கப் பணிகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் தொண்டர்களையும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தப் புதிய கட்சி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அனுபவம் வாய்ந்த அரசியல் மூத்த தலைவரான அவர், விஜய்யின் புதிய கட்சிக்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கக்கூடும் என்றும், இந்தச் சாத்தியமான கூட்டணி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.