தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இருவரும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வரும் சூழலில், இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணையக்கூடும் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் வலுவாகப் பரவி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் ஏற்பட்டுள்ள மோதலுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட்டு வரும் ஓபிஎஸ், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக திமுகவை அணுகுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “சபாநாயகர் அறையில் ஓபிஎஸ் அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தேன், இந்தச் சந்திப்பின் போது எந்தவிதமான அரசியல் விவாதங்களும் நடைபெறவில்லை” என்று கூறி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.