அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் வரும் 27-ஆம் தேதி நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகத் தகவல்கள் தீவிரமாக வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் மீது கடும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் மட்டுமின்றி, அதிமுகவின் பல்வேறு முக்கியத் தலைகளும் அவருடன் சேர்ந்து த.வெ.க-வில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த புதிய நிலைப்பாடு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் கே.ஏ. செங்கோட்டையனுக்கு, கட்சியில் பொதுச் செயலாளர் பதவியை வழங்க த.வெ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், மூத்த நிர்வாகியின் அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது த.வெ.கவின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கும் புஸ்ஸி ஆனந்துக்கு, புதுச்சேரி மாநிலத்தின் கட்சிப் பொறுப்புகள் தொடர்பான ஒரு முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்த மாற்றங்கள் த.வெ.க-வின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்களுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.