தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அவர், வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இதுவரை வெளிவராத பல முக்கியத் தகவல்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு, குடும்பத்தினருக்கு வழங்கிய கடன், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் எனப் பல விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
விஜய்யின் வேட்புமனுவில் உள்ள மிக முக்கியத் தகவல், அவரது பிரம்மாண்ட சொத்து மதிப்புதான். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 520 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் வருமாறு, அசையும் சொத்துகள்: ரூ. 404.58 கோடி அசையா சொத்துகள்: ரூ. 115.13 கோடி
அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யின் இந்த நிதி நிலைமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான விஜய்யிடம் ரூ. 7.52 கோடி மதிப்பிலான கார்கள் மற்றும் வாகனங்கள் உள்ளன. மிக எளிமையான வாகனங்கள் முதல் அதிநவீன சொகுசு கார்கள் வரை அவரது பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி BMW 530, Toyota Lexus 350, Toyota Vellfire, BMW i7, Maruti Swift ஆகிய கார்கள் இருக்கும் நிலையில் இவற்றுடன் மிக எளிமையான TVS XL Super இருசக்கர வாகனத்தையும் அவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் வேட்புமனுவில் உள்ள மற்றொரு சுவாரசியமான தகவல், அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் பலருக்குக் கடன் வழங்கியுள்ளார் என்பதுதான். அதாவது மனைவி சங்கீதா: ரூ. 12 கோடி தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்: ரூ. 3 கோடி, தாய் ஷோபா: ரூ. 87 லட்சம், மகன் ஜேசன் சஞ்சய்: ரூ. 8 லட்சம், மகள் ஷாஷா: ரூ. 4 லட்சம்
ஆனால், அவரது வேட்புமனுவில் சில சலசலப்புகளை ஏற்படுத்தும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. வருமான வரித்துறை தொடர்பான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சுமார் ரூ. 3.44 கோடி வருவாய் தொடர்பாக, அவர் மீது 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விஜய் வேட்புமனுவில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சுமார் ரூ. 1.64 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் குறித்துத் தகராறு நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்தச் சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி வழக்குகள் அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அவரது பிரம்மாண்ட சொத்து, குடும்பத்தினர் மீதான அன்பு, மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் என அனைத்தும் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் தேர்தல் முடிவுகளை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
