தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இம்மாத தொடக்கத்தில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் நோக்கிப் பயணித்தார். அப்போது, தங்களது தலைவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் விஜய்யின் காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அந்தவகையில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது பின்னால் வந்த வாகனங்கள் மோதின. இதில் கட்டுப்பாட்டை இழந்த விக்னேஷின் பைக், முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் அவருடன் பயணித்த நண்பர் அருண் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 19 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவர் விக்னேஷ், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
