ஈரான் நாட்டின் மிக வலிமை வாய்ந்த ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC), பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகள் ஒருமித்த முடிவை எடுத்துள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஐ.ஆர்.ஜி.சி அமைப்பு, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, இந்த அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
இந்த அறிவிப்பின் மூலம் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய சொத்துக்கள் முடக்கப்படலாம் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இந்த அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரானில் தற்போது உள்நாட்டு கலவரங்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அது தொடர்பாக கடும் எச்சரிக்கைகளை பிறப்பித்து வருகிறார். மேலும் அமெரிக்காவின் போர்க்கப்பல் ஈரானை நோக்கி சென்ற நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தற்போது ஈரானில் அந்த நாட்டு உச்ச தலைவர் அதிகாரத்தின் கீழ் செயல்படும் ராணுவ பிரிவினை பயங்கரவாத அமைப்பாக சேர்த்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
