நாய் கழிவுகளைச் சுத்தம் செய்யும் ஒரு விசித்திரமான பகுதிநேரத் தொழில் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு சுமார் 29 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயதான கைல் நியூபி என்பவரே இந்த அசாதாரண முயற்சியின் மூலம் ஒரு தொழில்முறை ‘பூப்பர் ஸ்கூப்பராக’ (Pooper Scooper) உருவெடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இத்தகைய சேவைகளுக்கு இருக்கும் வரவேற்பைக் கண்டு ஈர்க்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘பெட் பூ பிக்’ (Pet Poo Pick) என்ற பெயரில் இத்தொழிலைத் தொடங்கியுள்ளார்.

தற்போது வாரத்திற்கு சில மணிநேரங்கள் மட்டுமே உழைக்கும் அவருக்கு, சமூக வலைதளங்கள் மூலம் 35-க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

தனது தொழில் குறித்து விளக்கிய கைல் நியூபி, ஒரு தோட்டத்தைச் சுத்தம் செய்ய சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாகக் கூறுகிறார்.

இதற்காக அவர் முதல் முறை வருகைக்கு 40 டாலர்களும், பின்னர் வாராந்திரக் கட்டணமாக 20 டாலர்களும் வசூலிக்கிறார். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 60 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,000) வரை வருமானம் கிடைப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால், இச்சேவை அவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதாகவும், கழிவுகளைச் சுத்தம் செய்த பின் அப்பகுதியைத் கிருமி நீக்கம் செய்து சுகாதாரத்தைப் பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.