திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகித், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
​பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மோகித் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து மோகித்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவன் உயிர் பிரிந்தது.

இந்தத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மோகித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மகனின் உயிரற்ற உடலைக் கையில் ஏந்தி கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் கலங்க வைத்தது. பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மீது பராமரிப்பு குறைபாடு காரணமாக இந்தக் கோர விபத்து நடந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இடிந்து விழுந்த சுவரின் நிலை குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.