தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலேயே தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக-வுக்கு, ஏற்கனவே காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இன்று விசிக (2) மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளன. இதன் மூலம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட கூடுதல் பலத்துடன் விஜய் தரப்பு உள்ளது. அதோடு இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவு கொடுத்ததால் 120 ஆக பலம் உயர்ந்துள்ளது.

தவெக-வுக்கு ஆதரவு அளித்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது “தமிழகத்தில் தற்போது ஒரு அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. எங்களின் நிலைப்பாடு தவெக ஆட்சி அமைப்பதற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. குறிப்பாக, இந்தச் சூழலைப் பயன்படுத்தித் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி திணிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனாலேயே இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

நாங்கள் இப்போதும் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்கிறோம். எங்களின் இந்த முடிவு திமுக-வுடனான உறவைப் பாதிக்கும் என்று கருதவில்லை. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தோம். அதற்கு அவர், ‘இது உங்கள் கட்சியின் உரிமை, வாழ்த்துகள்’ எனத் தெரிவித்தார்.

விஜய் தலைமையிலான அரசு அமைய வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். இடதுசாரி கட்சிகளின் மாநிலக் குழுக் கூட்ட முடிவுகளின் அடிப்படையிலும், விசிக உயர்நிலைக் குழுவின் ஆலோசனையின் படியுமே இந்த ஆதரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்திக்க நேரம் கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் கேரளா செல்வதைக் காரணம் காட்டி நேரம் ஒதுக்காதது அதிர்ச்சியளிப்பதாகத் திருமாவளவன் குறிப்பிட்டார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பெரும் கட்சியின் தலைவரைச் சந்திக்க ஆளுநர் மறுப்பது ஜனநாயகப் படுகொலை. ஆளுநர் குதிரை பேரத்திற்கு இடம் கொடுக்காமல், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், விஜய் தன்னைச் சந்திக்க விசிக தலைமையகத்திற்கு வருவதாகக் கூறியதாகவும், “பதவியேற்பு விழா முடிந்த பிறகு சந்திப்போம்” எனத் தாம் அவருக்குத் தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறினார்.