தமிழக வெற்றிக் கழகம் தனது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிக முக்கியமான அரசியல் பிரகடனம் வெளியிடப்படும் என்று தவெக தலைமை இன்று (ஜன. 29) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் தற்போதுள்ள மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்து, விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க இந்த நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்போம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் கொடியேற்றம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பனையூர் பகுதி தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
