அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இன்று (ஜன. 29) மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும்” என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அவர் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படலாம் அல்லது தகுந்த கௌரவமான பொறுப்பு அளிக்கப்படலாம் என பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ்-யையும் அக்கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைய வாய்ப்பு மங்கிவிட்ட சூழலில், தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க ஓபிஎஸ் எடுக்கவுள்ள இந்த ‘மெகா’ முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
