அ.தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) முறைப்படி இணைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனின் இந்தத் திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையனின் முடிவு குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார். அவர் கூறுகையில், “செங்கோட்டையன் அவர்களை எனக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகத் தெரியும். அவரை முழுமையாகப் புரிந்துகொண்டவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்தவர் இன்று இத்தகைய முடிவை எடுத்திருப்பதைப் பார்த்து ‘எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே’ என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.