தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு உற்சாகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ள இந்தக் கழகம், கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது என்றும், அத்தனை தடைகளையும் எதிர்கொண்டு கட்சித் தலைவர் விஜய் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி திங்கட்கிழமை காலை பதினொரு மணிக்கு நடைபெற உள்ளதாக அவர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக உழைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறியத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் தலைமையில் மனசாட்சி உள்ள ஒரு மக்களாட்சியை அமைக்க அனைவரும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வெற்றிப் பயணத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தவெக தொண்டர்கள், இந்த விழாவைக் கொண்டாடி வெற்றிக்கு வித்திட வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
