தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம் என கே.சி வேணுகோபால் அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தங்களுடைய முடிவை அறிவிப்பதாக சொன்னது.

இந்த  நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.  தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மூலம் ஆதரவை அளிக்கும் என தேசிய காங்கிரஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டதால் தமிழக அரசியல்களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

பிரிவினைவாத சக்திகள் மற்றும் மதவாத சக்திகள் உடன் எந்த காலத்திலும் உறவு வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஐந்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் இனி தமிழக வெற்றி கழகத்துடன் தான் காங்கிரஸ் கூட்டணி எனவும் அறிவித்துள்ளது. இதன்மூலம் திமுக உடனான 20 வருஷ  கூட்டணிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் இது அறிவாலயம் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.