சென்னை கிண்டியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணிக் கட்சிகளின் பங்கேற்பு மற்றும் அதிமுக, திமுகவின் ரகசிய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது,

தமிழக அமைச்சரவையின் விரிவாக்கம் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த புதிய அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) என நம் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இதுகுறித்து அந்தந்தக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் உடனடியாகத் தங்களுக்குள் கலந்தாலோசித்து விட்டு முடிவு சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள். விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்.

நமது அமைச்சரவை என்பது ஒரு அன்பான குடும்பம் போல இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் விரும்புகிறார். அதேநேரம், வெளியில் இருந்து நமக்கு ஆதரவு கொடுத்து வரும் இடதுசாரி கட்சிகளின் கொள்கை முடிவுகளையும் நாங்கள் முழுமையாக மதிப்போம். சமூகநீதி அடிப்படையில் இயங்கும் தலைவர்களும், கட்சிகளும் இந்த அமைச்சரவையில் இணைய வேண்டும்.

மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்த காரணத்தினால்தான், அதிமுகவின் ஒரு தரப்பினர் தற்போது எங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. எங்களை ஆதரிக்கும் அந்த அதிமுகவினரை சி.வி.சண்முகம் வழிநடத்துவார். இதில் ஏதேனும் சட்ட சிக்கல் வந்தால் அதனை சி.வி.சண்முகம் எதிர்கொள்வார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ரத்தம் சிந்தி உருவாக்கிய அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். அதனை நாங்கள் எப்போதும் தோழமையுடன் தான் பார்க்கிறோம்.

கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு, ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் பின்புற வாசல் வழியாக மீண்டும் ஆட்சி அமைக்க நினைத்தார். அதற்காக திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்க்க முயன்றார். இதனை அதிமுக தொண்டர்களே தற்கொலைக்குச் சமமான முடிவு என்று கருதினர். அதேபோல், பாஜாகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததும் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், திமுகவும் தனது கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவுக்கு ஆதரவளிக்க முயற்சி செய்தது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் ஒரு ‘குதிரை பேர அரசியலை’ உருவாக்கினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்கள், “புதிய அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இப்படிப்பட்ட யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. அவர்கள் யாரும் அமைச்சர் பதவிக்காக எங்களைத் தேடி வரவில்லை” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அடுத்தடுத்த அரசியல் வெடிகுண்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.