பெங்களூரில் குடிபோதையில் தாயைக் கத்தரிக்கோலால் தாக்க முயன்ற மாற்றாந்தந்தையை, 23 வயது இளைஞர் ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரைக் கொன்ற குற்றத்திற்காக அவரது வளர்ப்பு மகனான உதய் குமார் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஸ்ரீதருக்குக் கடுமையான குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி தீனாவிடம் அடிக்கடி தகராறு செய்து, அவரை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தில் தினமும் சண்டை சச்சரவுகள் நீடித்து வந்துள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த ஸ்ரீதர், கத்தரிக்கோலை எடுத்து மனைவி தீனாவைத் தாக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் உதய், தன் தாயைக் காப்பாற்றுவதற்காக உடனடியாகத் தலையிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஷாக் அப்சார்பர் ராடை எடுத்து ஸ்ரீதரின் தலையில் மூன்று முறை பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீதரை, உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீனாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர் தான் உதய். முதல் கணவரைப் பிரிந்த பிறகு, கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு தீனா ஸ்ரீதரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட உதயியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.