தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இன்னும் 22 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்கும் நிலையில் மே 21ஆம் தேதி அதாவது நாளை இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அமைச்சர் ஆதவ் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசினார். அப்போது கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல், சிபிஎம் மற்றும் சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் எனவும் அதுதான் முதலமைச்சர் விஜயின் விருப்பம் எனவும் அனைவரும் ஒரு குடும்பம் போன்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
அதோடு அதிமுகவில் சிவி சண்முகம் அணியினர் அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்ற கேள்விக்கு அவர்கள் அமைச்சர் பதவி கேட்டு எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என கூறினார். இந்த நிலையில் ஆதவ் வெளிப்படையாக அழைப்பு விடுத்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஏற்கனவே என்னை நேரில் சந்தித்தபோது முதலமைச்சர் விஜய் என்னிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்தார். இப்போது தமிழக வெற்றிக்கழகம் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற அழைத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி. இது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் முன்னதாக மற்ற கூட்டணி கட்சிகளும் ஆலோசித்து முடிவெடுப்பதாக தங்களிடம் கூறியதாக ஆதவ் அர்ஜுனா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் தற்போது திமுக கூட்டணிகள் அனைத்தும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெறுவதாக வந்த செய்தி மு க ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
