தமிழக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? என்ற அரசியல் வட்டாரத்தின் மிக முக்கிய கேள்விக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகப் பதிலளித்துள்ளார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எப்படிக் கொண்டு வருவது என்பது குறித்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, திமுகவுடன் இணைந்து பின்புற வாசல் வழியாகவே கடைசி நிமிடம் வரை அனைத்து விதமான திட்டங்களையும் தீட்டி உருவாக்கினார்.
தமிழகத்தில் ஒரு நல்ல எதிர்க்கட்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யத் தவறிவிட்டார். ஒட்டுமொத்த அதிமுகவையும் டெல்லியில் கொண்டு போய் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எனவே, தொண்டர்கள் உடனடியாகத் தங்களது கட்சியை எடப்பாடியின் பிடியிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவை நாங்கள் ஒரு தோழமையோடு தான் அணுகி வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார். அதிமுக மற்றும் அதன் தலைமை குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள இந்த அதிரடியான கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
