தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில், தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரித்தா, குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அன்று அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
